Wednesday, 8 November 2017

பாரதியார் கவிதைகள்

நடிப்புச் சுதேசிகள்


நெஞ்சி லுரமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி - கிளியே 
வாய்ச்சொல்லில் வீரரடி.

கூட்டத்திற் கூடிநின்று
கூவி பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி - கிளியே
நாளில் மறப்பாரடி

சொந்த அரசும்புவிச் 
சுகங்களு மாண்புகளும் 
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே 
அலிகளுக் கின்பமுண்டோ?

கண்க ளிரண்டிருந்தும் 
காணுந் திறமையற்ற 
பெண்களின் கூட்டமடி - கிளியே
பேசிப் பயனென்னடி

யந்திர சாலையென்பார் 
எங்கள் துணிகளென்பார் 
மந்திரத் தாலேயெங்கும் - கிளியே 
மாங்கனி வீழ்வதுண்டோ 

உப்பென்றும் சீனியென்றும் 
உள்நாட்டு சேலையென்றும் 
செப்பித் திரிவாரடி - கிளியே 
செய்வ தறியாரடி

தேவியர் மானமென்றும்
தெய்வத்தின் பக்தியென்றும் 
நாவினாற் சொல்வதல்லால்  - கிளியே 
நம்புத லற்றாரடி

மாதரைக் கற்பழித்து 
வன்கண்மை பிறர்செய்யப் 
பேதைகள் போலுயிரைக் - கிளியே 
பேணி யிருந்தாரடி 

தேவிகோ யிலிற்சென்று 
தீமை பிறர்கள்செய்ய 
ஆவி பெரிதென்றெண்ணிக்  - கிளியே 
அஞ்சிக் கிடந்தாரடி 

அச்சமும் பேடிமையும் 
அடிமைச் சிறுமதியும் 
உச்சத்திற் கொண்டாரடி - கிளியே 
ஊமைச் சனங்களடி 

ஊக்கமும் உள்வலியும் 
உண்மையிற் பற்றுமில்லா 
மாக்களுக் கோர்கணமும் - கிளியே 
வாழத் தகுதியுண்டோ?

மானம் சிறிதென்றெண்ணி 
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் - கிளியே 
இருக்க நிலைமையுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் 
சிவசிவ வென்பது போல் 
வந்தே மாதரமென்பார் - கிளியே 
மனதி லதனைக்கொள்ளார் 

பழமை பழமையென்று 
பாவனை பேசலன்றிப்
பழமை இந்தநிலை - கிளியே 
பாமர ரேதறிவார்?

நாட்டி லவமதிப்பும் 
நாணின்றி இழிசெல்வத் 
தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே 
சிறுமை யடைவாரடி

சொந்தச் சகோதரர்கள் 
துன்பத்திற் சாதல்கண்டும் 
சிந்தை யிரங்காராடி - கிளியே 
செம்மை மறந்தாரடி 

பஞ்சத்தும் நோய்களிலும் 
பாரதர் புழுக்கள்போல் 
துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் - கிளியே 
சோம்பிக் கிடப்பாரடி.

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் 
தடுக்க முயற்சியுறார் 
வாயைத் திறந்து சும்மா - கிளியே 
வந்தே மாதரமென்பார்.