நடிப்புச் சுதேசிகள்
நெஞ்சி லுரமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
கூட்டத்திற் கூடிநின்று
கூவி பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி - கிளியே
நாளில் மறப்பாரடி
சொந்த அரசும்புவிச்
சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே
அலிகளுக் கின்பமுண்டோ?
கண்க ளிரண்டிருந்தும்
காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடி - கிளியே
பேசிப் பயனென்னடி
யந்திர சாலையென்பார்
எங்கள் துணிகளென்பார்
மந்திரத் தாலேயெங்கும் - கிளியே
மாங்கனி வீழ்வதுண்டோ
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டு சேலையென்றும்
செப்பித் திரிவாரடி - கிளியே
செய்வ தறியாரடி
தேவியர் மானமென்றும்
தெய்வத்தின் பக்தியென்றும்
நாவினாற் சொல்வதல்லால் - கிளியே
நம்புத லற்றாரடி
மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே
பேணி யிருந்தாரடி
தேவிகோ யிலிற்சென்று
தீமை பிறர்கள்செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தாரடி
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடி - கிளியே
ஊமைச் சனங்களடி
ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக் கோர்கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ?
மானம் சிறிதென்றெண்ணி
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் - கிளியே
இருக்க நிலைமையுண்டோ?
சிந்தையிற் கள்விரும்பிச்
சிவசிவ வென்பது போல்
வந்தே மாதரமென்பார் - கிளியே
மனதி லதனைக்கொள்ளார்
பழமை பழமையென்று
பாவனை பேசலன்றிப்
பழமை இந்தநிலை - கிளியே
பாமர ரேதறிவார்?
நாட்டி லவமதிப்பும்
நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே
சிறுமை யடைவாரடி
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை யிரங்காராடி - கிளியே
செம்மை மறந்தாரடி
பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாரடி.
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே
வந்தே மாதரமென்பார்.